தொடரும் நண்பர்கள்

சனி, 17 ஜூன், 2017

சுட்டபழம் வேண்டுமா, சுடாதபழம் வேண்டுமா



இந்த வாரத்து விருந்தினர் கந்தசாமி. நமது சீயான் விக்ரம் நடித்த கந்தசாமி இல்லை, கிட்டத்தட்ட 270 ஆண்டுகள் பழமை வாய்ந்த கந்தசாமியை பார்ப்போம் வாருங்கள்.


கந்தசாமி வேறு யாரும் இல்லை , இலங்கையின் பூர்வகுடி தமிழர்களின் கோட்டையாக திகழ்ந்த யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை செல்லும் பாதையில் 11/2 கி.மீ. தூரத்தில் நல்லூர் கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலை பற்றியும், இதன் வரலாறு மற்றும் கந்தசாமியாக வீற்று இருக்கும், சுட்டபழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமா என்று, அன்றே சிலேடை பேசிய எம்பெருமான் முருகபெருமானின் சிறப்புக்களை பார்ப்போம் வாருங்கள்.

சிலேடை பேசிய எம்பெருமான்

பத்து வருடங்களுக்கு முன் அந்த கோவிலுக்குள் வெளிஆட்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் போய்விட முடியாது. ராணுவ முகாம்கள், ராணுவ சோதனை சாவடிகள், ஊர்காவல் படையின் கண்காணிப்பு போன்றவற்றை தாண்டி நீங்கள் கந்தசாமியை தரிசிக்கவேண்டும். இரண்டு நாட்டு விசா வேண்டும், இருவராலும் சந்தேக கண்கொண்டு கசக்கி பிழியபடுவீர்கள், கிட்டத்தட்ட அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க நீங்கள் எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். இன்றைக்கு நிலைமை வேறு (இலங்கை ராணுவத்தால் விடுதலை புலிகள் தோற்கடிக்க பட்ட பிறகு வேறு ராணுவம், வேறு காவலர்கள் இருக்கிறார்கள்).

இவர் இருக்கும் இடம் நமக்கு மிகவும் பரிட்சயமான இடம் தான். தமிழக இளைஞர்களுக்கு அதுவும் 1987 களில் மாணவ பருவத்தை எட்டியவர்கள் அனைவரும் இந்த இடத்தை மறந்திருக்க முடியாது. சுற்றி வளைக்காமல் சொல்கிறேன். திலிபன் எனும் பெயரில் அழைக்கப்பட்ட பார்த்திபன் இராசையா என்கிற யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட 24 வயது இளைஞரை ஞாபகம் இருக்கிறதா? விடுதலை புலிகளின் அமைப்பில் அந்நாட்களில் லெப்டினன் கேணல் என்கிற பட்டம் வழங்கப்பட்டு, யாழ்ப்பாணத்தின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தவர் தான் இந்த திலிபன். இவருக்கும் இந்த கோவிலுக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா?



இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து நிறைவேற்ற கேட்டார். அவை இந்திய அமைதிபடையால் நிராகரிக்கப்பட்டது. ஏற்கனவே அறிவித்தபடி காந்திய வழியில் 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார்.அப்படி அவர் உண்ணாவிரதம் இருந்த இடம் தான் நல்லூர் கந்தசாமி கோவில் வளாகம். அந்த நாட்களில் எல்லோராலும் கூர்ந்து கவனிக்கபட்ட இடம் இந்த கோவில்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கந்தசாமி கோயில் 948 கி.பி இல் கட்டப்பட்டு, வெளிநாட்டவர்கள் படையெடுப்பு காரணமாக பலமுறை இடிக்கப்பட்டு, நல்லூர் பிரதேசத்திற்குள் பல்வேறு இடங்களில் பல முறை இடம் பெயர்ந்து உள்ளது. இந்த கோவில் முதன்முதலில் கட்டப்பட்ட வருடம் பற்றிய சரியான வரலாற்று பதிவுகள் இல்லை. (வரலாறு முக்கியம் என்று பள்ளியில் ஆசிரியர் சொன்னபோதும் சரி, திரைபடத்தில் வடிவேலு சொன்னபோதும் சரி, சிரித்துவிட்டு அதை மறந்துவிட்டோம்).



தற்போதைய கோவில்

கடைசியாக போர்த்துகீசிய ஜெனரல் பிலிப் டி ஒலிவேர் 1610 ஆம் ஆண்டு வரலாற்று புகழ் மிக்க கந்தசாமி கோவிலை இடித்துத் தள்ளினார், கிட்டத்தட்ட இதே ஆண்டுகளில் (1964 - 1966) திருச்செந்தூர் முருகன் கோவிலும் டச்சு காரர்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகி இருந்தது. இரண்டு வருடங்கள் இந்த ஆக்கிரமிப்பு திருச்செந்தூரில் இருந்திருக்கிறது, மக்களின் தொடர் போராட்டங்கலாலும், மதுரை நாயக்கர் உத்தரவின் பேரிலும் கோவிலில் இருந்து டச்சு காரர்கள் வெளியேறினார்கள். (அவர்கள் வழக்கப்படி விலை மதிக்க முடியாத, சிலைகளையும், ஆபரணங்களையும் எடுத்து சென்றார்கள் என்பதை சொல்ல தேவை இல்லை) முருகனுக்கு வந்த சோதனையில் என்ன ஒற்றுமை பாருங்கள்.


அதற்கு பிறகு தற்போதைய கோவில் 1749 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலனித்துவ சகாப்தத்தில் கிருஷ்ணசுப ஐயர் மற்றும் ரகுநாத மாப்பன முதலியார் ஆகியோரால் 'குருக்குல் வால்வு' என்ற மூலக் கோவில், இவ் வளாகத்தில் கட்டப்பட்டது. அவ்வப்போது மேம்பாட்டு நடவடிக்கைகள் நடை பெற்றாலும், (1899 மற்றும் 1902 வருடங்களில் குறிப்பிட தகுந்த கட்டிட பணிகள் நடந்துள்ளன) 1964 ஆம் ஆண்டில் 'வசந்த மண்டபம்' மிகுந்த பொருள் செலவிலே கட்டப்பட்டது.



இந்த கோவிலின் முக்கிய நுழைவு வாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கட்டிடக்கலையை பொறுத்தவரை அனைத்தும் திராவிட கோவில்களை ஒத்து இருக்க கூடிய அமைப்புதான். ஆலயத்தின் தெற்கு புறத்தில் தெப்ப குளம் (தீர்த்த கேணி) அமைந்துள்ளது. அந்த குளத்தின் அமைப்புகூட நமது திராவிட கோவில்களை ஒத்ததாக இருகின்றது.


முருகனின் மற்றொரு பெயரான தண்டாயுதபாணிக்கு அக்குளத்தை ஒட்டி சிறு கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நான்கு பக்கங்களில் மடாலயங்களும் அமைந்துள்ளன.

இந்த கோவிலின் எழில் மிகு தோற்றம் இங்கு வந்து செல்வோரின் மனதை கொள்ளை கொள்கிறது.



எழில் மிகு தோற்றம்

ஒருவேளை இலங்கையில் யாழ்ப்பாணத்தில் எரிக்கபட்ட நூல் நிலையம் இருந்திருந்தால் , இந்த கோவிலை பற்றிய ஏதாவது வரலாற்று சான்று இருந்திருக்கும். 1933 -களில் துவங்கப்பட்ட இந்த நூலகம் எரிக்கப்பட்ட போது சுமாராக 97,000 அறிய புத்தகங்களையும், சுவடிகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது.



யாழ்ப்பாணத்தில் எரிக்கபட்ட நூல் நிலையம் 

இந்த கோவிலின் சிறப்பு மூலஸ்தானத்தில் முருகனுடைய வேல் மட்டுமே இருக்கிறது. மேலும் இங்கு சிறப்பு பூஜை என்று சொல்ல கூடிய நித்ய அக்கினி மற்றும் நித்ய உற்சவம் தினமும் நடைபெறுகிறது. முருகனுக்கு பிடித்த கார்த்திகை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

மூலஸ்தானத்தில் முருகனுடைய வேல்


முருகனின் ஆறுபடை வீடுகளை போல் இலங்கையில் அமைந்துள்ள தொன்மையானதொரு வரலாற்று ஆன்மீக சின்னம் இந்த கோவில். இதை போலவே இலங்கையில் கதிர் காமத்தில் அமைந்துள்ளது  மற்றொரு சிறப்பு மிக்க முருகன் கோவில்.

நல்லூரில் பூசைகளும் மகோற்சவமும்


இவ்வாலயத்தில் நித்திய, நைமித்திய பூசைகள் காலந் தவறாது நடைபெறுகின்றன. ( 5 கால பூசைகள்). மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த கோவிலில் சொல்ல படும் மந்திரங்கள் பிரத்தியேகமாக இந்த கோவிலுக்கு என்று உருவாக்கப்பட்டு பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வருகிறது. வேறு ஒரு கோவிலில் இருந்து அர்ச்சகர் இங்கு வந்து அர்ச்சனை செய்துவிட முடியாது.

பூசை

மேலும் இந்த கோவிலின் பேரில் மன்னர்கள், செல்வந்தர்கள் வழங்கிய செல்வம் மிக அதிகம் என்பதால் இங்கு இன்றுவரை அர்ச்சனைக்கான கட்டணமாக இலங்கை ரூபாயில் Rs.1/- மட்டுமே (நமது ரூபாயில் 0.42 பைசாக்கள் மட்டுமே)பெற்று கொள்கிறார்கள். 


இங்கு, ஆவணி அமாவாசையை கணக்காக கொண்டு இருபத்தைந்து நாட்களுக்கு மகோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.


மகோற்சவ காலங்களில்,முருக பக்தர்கள் காவடி எடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அள்ளுகாசும் தென்னம்பிள்ளையும் வழங்கல், பிள்ளை விற்று வாங்கல், மடிப்பிச்சை எடுத்தல், மொட்டையடித்தல், பட்டுச் சார்த்தல், தேவாரம் ஓதுதல், வடம்பிடித்தல் முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.


இக்காலத்தில் சமயப் பிரசங்கம் செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன.

இன்றைய நிலையில் தமிழர்களை விட தமிழ் கடவுளான கந்தசாமி சிங்களவர்களுக்கு மிகவும் பிடித்து போய் விட்டார். கோவிலுக்கு போவதென்றால் அவர்கள் மூன்று நாட்கள் அசைவம் தவிர்த்து, சைவம் சாப்பிட்டு விட்டு தான் கோவிலுக்கு போகிறார்கள். கோவிலில் மனம் உருகி வணங்கி செல்வதை சாதரணமாக பார்க்க முடிகிறது.



இந்த கோவிலை பொறுத்தவரை, தமிழ் நாட்டில் முருக கடவுளுக்கு நடைபெறும் அனைத்து பூசைகளும் நடை பெறுகிறது.

எவ்வளவோ தடைகள், சோதனைகள், எதிரிகள் இந்த முருகனை அழிக்க பார்த்தாலும், என்னை அழிக்க முடியது என்பதை போல் வேல் ஒன்றை ஆயுதமாய் வைத்துகொண்டு நல்லோரை நல்லூரில் இருந்து காத்து கொண்டிருக்கிறான்...

தவித்து கொண்டிருக்கும் தமிழினம் இந்த முருகனின் வரலாற்றில் இருந்து ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த கந்தசாமி கடவுள் சாதாரணமானவர் அல்ல, எத்தனை எதிரிகள் வந்தாலும், எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தனை முறை அழித்தாலும், மீண்டும் அவர் எழுந்ததுபோல், இந்த தமிழ் இனமும் தமிழ் மொழியும், எத்தனை முறை அழிக்க முயற்சித்தாலும் மீண்டும் உயிர்பெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !

ஞாயிறு, 11 ஜூன், 2017

டாக்டர் மரியா மாண்டிசோரி

இன்று காலை எனது சகோ செந்தில் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது மகன் ஈவேரா ( தந்தை பெரியாரின் மீது மிகுந்த அன்பு கொண்டவன், அந்த அன்பில் வெளிப்பாடுதான் மகனுக்கு ஈவேரா என்கிற பெயர்) பள்ளிக்கு முதன்முரையாக செல்வதால் நீங்கள் வாழ்த்துங்கள் என்று தொலைபேசியை அவனிடம் கொடுத்தான் மழலைக்கு வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு செந்திலுடன் பேசும்போது எந்த பள்ளியில் சேர்த்திருகிறாய் என்று வினவினேன்.

பள்ளியின் பெயரை உடனே கூகிள் உள்ளே போய் பார்த்தேன்...அவர்கள் மாண்டிசொரி முறையிலான கல்வியை வழங்குகிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன்...

மாண்டிசொரி முறை பற்றி (நாம் படித்த களத்தில் இம்முறை இல்லையே என்ற ஏக்கம் என்னுள் எழுந்தது.. இருந்தால் மட்டும் என்று ஏனது ஆசிரியரின் எண்ணஓட்டதையும்   கேட்க முடிகிறது...!) முன்னொரு காலத்தில் படித்த விசயங்களை உங்களோடு பகிர்துகொண்டால் என்ன என்று தோன்றியது....வாருங்கள் நண்பர்களே அவரை பற்றி பார்ப்போம்...



1870 ஆம் வருடம் இத்தாலியின் சிராவல் நகரில் அலெசான்ரோ மற்றும் ஸ்டாப்பாணி தம்பதிக்கு பிறந்த மகள் தான் மரியா மாண்டிசோரி. பிறந்த ஒருவருடகாலத்தில் 1871 - இல் இத்தாலியின் ரோம் நகருக்கு குடிபெயர்ந்தார்கள். அவருடைய தந்தை அலெசான்ரோ - ஒரு அரசாங்க அதிகாரி ஆவர்.

அரசாங்க ஆரம்ப பள்ளியில் தனது படிப்பை துவங்கினாலும்,  ஆண்களால் சூழப்பட்ட ரோம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ துறையில்  முதல் பெண்ணாக நுழைந்து, இத்தாலியின் முதல் பெண் மருத்துவராக பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் வெற்றிகரமான வெளிவந்தார். இதில் முக்கியமானது அவரது தந்தை எப்படியாவது அவரை ஒரு ஆசிரியை ஆக்கவேண்டும் என்று முயன்றார். ஆனால் அந்த  எதிர்ப்பையும் மீறித்தான் மாண்டிசோரி  மருத்துவர் ஆனார்.  அப்பொழுது அவருக்கு தெரியாது, அவர் வேண்டாம் என்று  ஒதுக்கி தள்ளிய கற்பித்தலை செய்யவும், கற்பித்தலுக்கு ஒரு சிறந்த முறையையும் உருவாக்க போகிறோம் என்று...



டாக்டர் மரியா மாண்டிசோரி தனது மருத்துவ வாழ்க்கையை ஆரம்பித்த உடனேயே, மகளிர் உரிமை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திகொண்டார் சமூகத்தின் எல்லா  வகுப்பு நோயாளிகளுக்கும் அவர் அளித்த உயர் சிகிச்சைக்காகவும், அவர் காட்டிய மரியாதைக்காகவும் எல்லோராலும் அறியப்பட்டார். 1897 ஆம் ஆண்டில், டாக்டர் மாண்டிசோரி ஒரு தன்னார்வளராக, ரோம் பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவ துறையில்  ஆராய்ச்சி திட்டத்தில் தன்னை இனைத்துகொண்டார்

அந்த ஆராய்ச்சி கற்றல் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளை  பற்றியது. சிலநாட்களில் அவருக்கு மிகுந்த ஈடுபாட்டை ஏற்படுத்திய ஒரு விசயமாக ஆகிவிட்டது.  அதே  நேரம் மாண்டிசோரி ஆர்த்தோபிரானிக் பள்ளி ஒன்றில் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

தனது இருபத்தி எட்டாவது வயதில் மாண்டிசோரி, சமூகத்தின் ஆதரவின்மையே மனவளர்ச்சி மற்றும் ஊனமுற்ற குழந்தைகளின் அவல நிலைக்கு காரணம் என்று தனது கருத்தை உரக்க பதிவு செய்தார். அன்றைக்கு (இன்றைக்கும்) மனவளர்ச்சி மற்றும் ஊனமுற்ற குழந்தைகளின் நிலை மிகவும் கொடுமையானது. அப்பொழுது அவரது அயராத சிந்தனையியிலும், இடைவிடாத முயற்சியாலும் உருவாகியது தான் மாண்டிசோரி கற்பித்தல் முறை.
 
1909-ல் டாக்டர் மாண்டிசோரி ரோம் நகரில் தனது சொந்த கல்வி 
நிறுவனமாக  “காசா டீ பாம்பினி”யைத் திறந்ததார்.  அவர் 
ஆர்த்தோபிரானிக் பள்ளியில் அவரால் உருவாக்கப்பட்ட கல்வி 
கற்பித்தலுக்கான பொருட்களை மாதிரியாக கொண்டு அந்த பள்ளியை 
மேம்படுத்தினார். 


குழந்தைகளுக்கு  தாங்கள் கற்பதற்கு  சரியான  சூழ்நிலையையும், சரியான உபகரணங்களையும் உருவாக்கி தந்தால், அவர்களது கற்கும் திறன் மிக அதிகமாகவும், எளிதாகவும் இருப்பதை உணர்ந்துகொண்டார்.

அவர் உருவாக்கிய கற்பித்தல் முறையை பற்றி சுருக்கமாக பார்ப்போம்..

குழந்தைகளால் எளிதாக கையாலகூடிய உபகரணங்களை தேர்ந்தெடுத்து, காட்சியில் வைத்து, அவற்றை கொண்டு குழந்தைகளே கற்றுகொள்ளும் வகையில் வடிவமைத்தல்.

மாண்டிசோரி அம்மையார், சில பிரத்யேக உபகரணங்களை உருவாக்கினார். அந்த உபகரணங்கள் விஞ்ஞான அடிப்படையில் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை. கணிதம் சார்ந்த கருத்தடிப்படையில் உருவாக்கப்பட்டவை. பெளதீகப் பண்புகளைக் கொண்டவை.









இத்தகைய உபகரணங்களின் மூலம் செயல்பாடுகளை மேற்கொண்ட குழந்தைகளுக்கு, அந்த உபகரணங்களைப் பற்றிய விழிப்புணர்வு கிடைக்கிறது. அதன் பெளதீகப் பண்புகளை அடையாளம் கண்டு, பார்க்குமிடங்களிலெல்லாம் உற்சாகத்துடன் தெரிந்து கொள்கிறார்கள். நுணுக்கமாக செயல்படுவதன் மூலம், குழந்தையின் அறிவுக்கும் நுட்பமான விபரங்கள் கிடைக்கின்றன. இதனால் குழந்தையின் ஆளுமையும் வளர்கிறது. இதன்மூலம், குழந்தைக்கு விஞ்ஞான ரீதியில் செயல்படும் வாய்ப்பு கிடைக்கிறது.




இப்படி பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உபகரங்களை கொண்டு கணிதம், மொழியியல் போன்றவை மிக சிற்பாக கற்பிக்கப்படுகிறது.
  
இந்த முறையை மக்கள் அவளவு சுலபமாக ஏற்றுகொள்ளவில்லை. 1912 ஆம் வருடத்தில் இவரது கற்பித்தல் முறை அமெரிக்காவில் அறிமுக படுத்தபட்டது. மெல்ல மெல்ல ஐரோப்பாவின் மற்ற பாகங்களுக்கும் பரவியது. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்க பட்டது. கிட்டத்தட்ட ஐரோப்பாவின் பெரும்பான்மை நாடுகள் அவரை தங்கள் நாட்டுக்கு அழைத்து அந்த முரையில் கற்பித்தலை ஆரம்பித்தார்கள். 1939 வரை எல்லாம் சரியாக போய்கொண்டிருந்தது.

இந்தியாவிற்கு மாண்டிசோரி முறை வருவதற்கு அதுவும் மருத்துவர் மாண்டிசோரி நேரிடையாக இந்த முறையை பயிற்ரு வித்ததர்க்கு நாம் ஹிட்லருக்கு நன்றி சொல்ல வேண்டும்.



இந்தியா, இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் வெளியிட்ட தபால் தலைகள் 

நாசிக்களின் ஆட்சியில் மாண்டிசோரி முறை தடை செய்யப்பட்டது. மருத்துவர் மாண்டிசோரி தனது மகன் மரியோ-வை அழைத்துக்கொண்டு Theosophical Society of India  வின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வந்தார். அவருக்கு கலாசேத்ராவை உருவாக்கிய திருமதி ருக்மணி தேவி அருண்டெல் உடன் அடையாரில் தங்கினார். இரண்டாம் உலகப்போர் அவரது இந்திய பயணத்தை 1946 வரை நீடித்தது.

இந்த காலகட்டத்தில் பலநூறு ஆசிரியர்களுக்கு இந்த கற்பித்தல் முறையை அவர் கற்பித்தார்.   சில வருடங்கள் அவர் வீட்டுகாவலில் இருக்கவேண்டிய சூழலை இரண்டாம் உலகப்போர் ஏற்படுதியது. அந்த சூழ்நிலையிலும் அவர் பலருக்கு கற்பித்தல் முறையை கற்பித்து இன்று வரை இந்தியாவில் இந்த பயனுள்ள முறை உருவாவதற்கு  உதவினார்.

இத்தாலிநாடு வெளியிட்டுள்ள அந்நாட்டு பணம் 

1946 –இல் ஐரோப்பா திரும்பினாலும் அவரது இடைவிடாத கல்வி பணி தொடர்ந்தது. குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட இந்த நீண்ட நெடிய ஒரு போராட்டம் 1952 மே – 6 அன்று முடிவுக்கு வந்தது. தனது 89வது  வயதில் நம்மை விட்டு மறைந்தாலும் அவரது பணி இன்றுவரை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மாண்டேசியர்களின் வடிவில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
 
"நான் குழந்தைக்கு என் விரலை சுட்டிக்காட்டுகிறேன்.
ஆனால் நீ ஏன் என் விரலைப் பாராட்டுகிறாய்?" –
என்பது தான் அவரது கடைசி வார்த்தையாக இருந்தது...

ஒப்பற்ற ஒரு கல்வி முறையை வழங்கி சென்ற மருத்துவர் மரியா 
மாண்டிசோரி மனிதர்கள் கற்கும் வரை இந்த உலகத்தை விட்டு 
போக மாட்டார்... என்பது உறுதி...
 



சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...