தொடரும் நண்பர்கள்

வியாழன், 1 ஜூன், 2017

சிங்களமும், சிங்களர்களும்

இலங்கையை பொறுத்தவரை சிங்களரும், தமிழரும் ஒன்றுக்குள் ஒன்றாக பல நூற்றாண்டுகள் பழகிய இனம்தான். அண்ணன் தம்பியாக பழகிவந்த இந்த இனம், அந்த உறவை சரியான வகையில் பேணாமல் வேறுபாட்டை பார்க்கும் நிலையை கடந்த 35~40 வருடங்களில் உருவாக்கிவிட்டார்கள். காரணம் என்ன, யார் நல்லவர், யார் கெட்டவர் என்றெல்லாம் பார்க்கவேண்டும் என்றால் இலங்கையின் வரலாற்றில் இருந்து நாம் ஆரம்பிக்கவேண்டும். 

எனது எண்ணம் அதுவல்ல, சிங்கள மொழி பற்றியும், சிங்களர்கள் பற்றியும் உங்கள் புரிதலுக்காக இதை எழுதுகிறேன்.

சிங்களர்கள் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல, அதை போல சிங்கள மொழி தீண்டத்தகாத மொழியும் அல்ல.  நான் இருந்த சிலவருடங்களில் சிங்கள மொழியுடனும், சிங்கள இனத்தவருடன் ஏற்பட்ட  பழக்கத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...

1998 ம் வருடம் இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடைந்தவுடன் ஆயுபவன் என்று ஆரம்பித்த சிங்கள மொழி இன்றுவரை என்னால் பேசமுடிகிறது..

தமிழ் நாட்டில் என்வயதுகாரர்கள் அல்லது என்னைவிட மூத்தவர்கள் (சுமாராக 1965 இல் இருந்து 1980 வரை  பிறந்த  அனேகம் பேர் சிங்களம் தெரிந்தவர்கள்தான்...) எப்படி என்கிறீர்களா? வாருங்கள் உங்களுக்கு சிங்களம் தெரியும் என்பதை நான் நிருபிக்கிறேன்..

சுராங்கனி சுராங்கனி ... சுராங்கனிக்கு மாலு கெனாவா..
மாலு மாலு மாலு...சுராங்கனிக்கா மாலு...

சுராங்கனிக்கு மாலு கெனாவா..

என்று ஒரு கானா பாட்டு உண்டு..உங்களுக்கு நினைவு இருக்கிறதா, அந்த பாட்டு உங்களுக்கு தெரியும் என்றால்  உங்களுக்கு சிங்களம் தெரியும்...இது சிங்கள மொழியில் பிரபலமான ஒரு பைலா பாட்டு..

சுராங்கனி என்பது ஒரு பெண்ணின் பெயர்..மாலு என்பது மீன்...கெனவா...கொண்டுவந்தேன் இப்பொழுது நீங்களே தமிழில் பாடுங்கள்..



யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட திரு மனோகரன் என்கிற பாடகர்  1970 – ஆம் வருடங்களில் தமிழ் , சிங்களம் மற்றும் ஆங்கிலம்  கலந்து பாடக்கூடிய ஒரு பாப் பாடகர், (அன்றைய காலகட்டங்களில் இலங்கை வானொலியில் மிகவும் புகழ் பெற்ற  ஒரு பாடகர்) அவர்  பாடிய பாடல் தான் அது, அதை நமது இளையராஜா “அவர் எனக்கே சொந்தம்” என்ற படத்தில் தமிழில் இதை முயன்றிருப்பார்.) அன்றைய ரேடியோ சிலோன் நிகழ்சிகளில் இந்த பாடல் இடம் பெறாத நாளே இருக்காது எனலாம்.

மொழியை தவறாக பேசினால் சிங்களம்

தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும் சில விளையாட்டான நிகழ்வுகள்  என் மனதில் இன்றும் இருக்கிறது..

அப்பாவை நாம் அப்பா என்று அழைப்பது தானே  வழக்கம்  - சிங்களர்கள் தங்கள் அப்பாவை “தாத்தா” என்று அழைப்பதை பார்த்து வியந்தேன்...

சாப்பிட அமர்ந்தபோது அருகில் இருத்த சிங்களவர் “மதி” “மதி” என்று சொன்னார்...

ஒ நமது மலையாளமும் கலந்தது தான் இவர்கள் மொழியா என்று நினைத்தபடி – சோறு பரிமாறிய பெண்மணியிடம் மதி என்றேன்...

அவர் என்னை நோக்கிவிட்டு, மீண்டும் வைத்தார், நான் மதி மதி என்றேன்...அவருக்கு வியப்பு...என்னை நன்றாக பார்த்துவிட்டு உள்ளே சென்று மீண்டும் சோறு எடுத்துவந்து பரிமாற தயாராக வந்தார்...

அப்பொழுதுதான் புரிந்தது...அவர்கள் மொழியில் மதி என்றாள் போதவில்லை என்று...சாப்பாட்டு  ருசியின் காரணமாக நான் மதி மதி என்று சொல்லுவதாய் அந்த பெண் நினைதிருக்க கூடும்..

நமது மலையாளத்தில் “மதி” என்றால் போதும் என்று அர்த்தம்...

பிற மொழியை தவறாக பேசினால் சிங்கள மொழி வந்துவிடுமோ என்று விளையாட்டாக நினைத்தது உண்டு, அந்த கருத்தை அவர்களிடம் தெரிவித்ததும்  உண்டு.....

தமிழில் நாம் கீரை என்பதை அவர்கள் –“கொழை என்று அழைப்பார்கள் இது நம்மால் புரிந்துகொள்ள முடித்த ஒரு சொல் தான். இதை போல – ஒரு பொருளின் அழகை ரசிபதற்கு ரசனை வேண்டும் என்கிறோம் அவன் அந்த அழகையே “லசானாய்” என்கிறான்...நம்மால் எளிதில் இந்த வார்த்தைகளை புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழில் இருந்து சிங்களத்துக்கு எடுத்து செல்லப்பட்ட சில வார்த்தைகளை பாப்போம்

தமிழில்              சிங்களத்தில்
ஆப்பம்          -     ஆப்ப
அக்கா          -     ஆக்கே
ஆதாயம்        -     ஆதாய 
இடம்           -     இடம 
இலக்கம்        -     இலக்கம 
கடலை         -     கடலே
கடை           -     கடே
கம்பி           -     கம்பியா
உதவி          -     உதவா 
சுளுக்கு         -     உலுக்குவ

இதை போல ஏராலமான தமிழ் சொற்கள் சிங்கள மொழியில் நேரிடையாக பயன் படுத்தப்பட்டுள்ளது.

இப்படியாக சிங்களம் கற்றுகொள்ளும் எளிய முறைகளை தெரிந்து கொண்டு ஒரு சில மாதங்களில் மொழியை புரிந்துகொண்டு பேச ஆரம்பித்தேன்....ஒரு காலகட்டத்தில் சிங்களரிடம் அவர்கள் மொழி பற்றி நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இருக்காது..!

உதாரணத்துக்கு – பால் என்றால்  சிங்களதில் – கிரி
                      தயிர் என்றால் அதுவும் கிரி
                      மோர் என்றால் அதுவும் கிரி

என்றுதான் அழைப்பார்கள்...

(நமது ஊறுகாயை போல் மூன்று காலத்தையும் குறிப்பதற்காக பயன்படுத்திருப்பார்களோ?)

அவர்களது மொழியில் தயிருக்கும், மோர்க்கும் இருக்கும் உண்மையான வார்த்தைகள் அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் வார்த்தைகள் உள்ளன. 

சரி மொழியை பற்றி பேசியது போதும், அவர்களை தெரிந்து கொள்வோம்..

சிங்களர் அனைவரும் கெட்டவர்கள் கிடையாது. நான் என்னது அனுபவத்தில் சொல்கிறேன் அங்கிருக்கும் பெரும்பாலான சிங்களர்கள் நல்லவர்கள் தான்.

எனது உயிர் நண்பன் பிரேம் ஆனந்த் கொழும்பு நகரில் உள்ள வத்தளை என்கிற பிரதான பகுதில் வசித்துவருபவன். 1983 இலங்கை தமிழர் மீது நடத்தப்பட இனவெறி தாக்குதலில் நண்பன் தனது குடும்பத்துடன் தஞ்சம் புகுந்தது ஒரு சிங்களவர் வீட்டில் தான்.. அவர்கள் தான் கலவரம் முடியும் வரை இவர்களை பாதுகாத்து விமான நிலையம் வரை செல்ல உதவி புரிந்தார்கள். 

இதை போல் என்னோடு  பழகிய பல தமிழர்கள் மூலம் ஒன்றை அறிந்து கொள்ள முடிந்தது எல்லா சிங்களவர்களும் கலவரத்தில் பங்கேற்கவில்லை என்பதும் நிறைய இடங்களில் சிங்களர்தான் தமிழருக்கு உதவி உள்ளார்கள் என்பதும், நான் அறிந்தவரையில் அது சரிதான்..
புத்தாண்டு கொண்டாட்டங்கள் 

இதை தவிர எனது நேரடி அனுபவங்கள் நிறைய உண்டு...நல்ல மழை நாளில்,  இரவு பயணமாக நுவரேலியா என்கிற மலை பிரதேசத்தில் இருந்து கண்டி வரும் வழியில் சாலையில் மரம் விழுந்து போகுவதற்கு வழி இல்லாமல் நள்ளிரவில் தவித்து கொண்டிருந்தேன்...என்னோடு வந்திருந்த டிரைவர் தமிழர், சுத்தமாக அவருக்கு சிங்கள மொழி தெரியாது...எனக்கு ஓரளவு மொழி வசபட்டிருந்த நேரம்...தவித்து கொண்டிருந்தேன்... அருகில் இருந்த ஒரு வீட்டை நோக்கி சென்று உதவி கேட்க துணிந்து அவர்கள் வீட்டின் கதவை தட்டினேன்...

அவர்களும் சிங்களம் தான் பேசினார்கள் ஆனால் அந்த வட்டார வழக்கில் பேசுவதால் என்னால் அவர்கள் சொல்லுவதை புரிந்துகொள்ள முடியவில்லை. தடுமாறி நின்றேன்வீட்டில் இருந்த பெரியவர் வெளியில் எட்டி பார்த்து விட்டு நிலைமையை புரிந்து கொண்டு என்கையை பிடித்து உள்ளே அழைத்து அமரசெய்துவிட்டு,  மனைவியிடம் எதோ சொல்லிவிட்டு, கையில் கோடரியை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்

சிறிது நேரத்தில் அந்த குளிருக்கு இதமாக ஒரு டீ –யும், நன்கு ரோஸ்ட் செய்யப்பட்ட ப்ரெட் துண்டுகளும் கொடுத்தார்...எனக்கு தர்ம சங்கடமான நிலைமை, சரி என்று எடுத்து உண்டுவிட்டு அவரிடம் கை கூப்பி எனது நன்றியை சொன்னேன்...அவருக்கு எனது உணர்வுகள் புரிந்தது...

அந்த சிங்கள மனிதர் மரத்தை வெட்டி சாலையை சரி செய்து நாங்கள் போவதற்கு வழி ஏர்படுத்தி கொடுத்தார்...விடியற்காலையில் கொரிய தேசத்தில் இருந்து வரும் எனது MD யை வரவேற்க்க  சரியான நேரத்துக்கு விமான நிலையத்தை அடைந்தேன்...அந்த சிங்கள மனிதரை என்னால் மறக்க முடியாது...


சிங்கள , தமிழ் புத்தாண்டு பொங்கல் வைக்கும் நிகழ்வு

மீண்டும் ஒருநாள் நன்றாக சிங்களம் பேச தெரிந்த நாட்களில் அந்த பாதையில் போகும் வாய்பு கிடைத்தது, அன்று அவருக்கும் அவரது குடும்பதாருக்கும் எனது நன்றியையும், குழந்தைகளுக்கு நல்ல உடைகளையும், அந்த பெரியவருக்கு மழைகாலத்தில் உதவும் கோட்  ஒன்றையும் பரிசளித்துவிட்டு வந்தேன்...

ஒருசமயம் எனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நான் பாஸ்போர்ட் வைத்திருக்கும் பண பெட்டி காணமல் போனது....அப்பொழுது இலங்கை போலீசில் நான் மட்டும் தனியாக போய் நடந்ததை தெரிவித்து உதவுமாறு கேட்டுக்கொண்டேன்.. அங்கிருத்த இன்ஸ்பெக்டர் ( அங்கு OFFICER INCHARGE – OIC என்று அழைப்பார்கள்) உடனடியாக களத்தில் இறங்கி சரியாக 6 ~ 7 மணி நேரத்தில் எனது பாஸ்போர்ட் கிடைத்திட செய்தார்...மேலும் காணமல் போன பணமும் வந்து சேர்ந்தது... அந்த இன்ஸ்பெக்டர் நிறைய நேரங்களில் எனக்கு உதவி இருக்கிறார்...எந்த ஒரு பதில் உபகாரமும் எதிர் பாராத மனிதர்...

இவரைபோல் நிறைய சிங்கள முகங்கள் உள்ளன.. ஆனால்  அரசியல் வாதிகளின் சுய லாப நோக்கத்தோடு செயல்படும் சிங்களர் மட்டும் தான் நமது கண்களுக்கு தெரிகிறார்கள்...சிங்களவர்களில் இன பேதம் பார்த்த  கெட்ட சிங்களர்களையும் சந்தித்திருக்கிறேன்...ஆனால் அவர்கள் மிகவும் குறைவு. 

புத்தாண்டு சிறப்பு படையல்

குறிப்பாக தமிழர் வாழும் பகுதி,  சிங்களர் வாழும் பகுதி என்று நிலத்தை பிரித்த பிறகு அந்த எல்லையோர நகரங்களில் வாழும் இரு இனத்தவரிடமும் இன துவேசம் இருந்ததை என்னால் உணர முடித்து.

சிங்களவர்களும் நம்மைப்போல் வீட்டில் இறந்த பெரியவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்தது திதி கொடுப்பதாகட்டும், ஒரு நிகழ்வை திட்டமிடும்போது நாள், கிழமை, நேரம் பார்பதாகட்டும்  அனைத்தும் நம்மை போல் தான்..

சிங்களர்களும்  மனிதர்கள் தான்.. .அவர்கள் வழிபாட்டுக்கு தமிழகம் வரும்போது தாக்கபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை...எங்கள் மீனவர்கள் சுடபடுகிறார்கள்,  பதிலுக்கு நாங்கள் வழிபட வந்தவர்களை தாக்கினோம்  என்பது  எந்த விதத்தில் சரி..? ராணுவம் சாதாரண மக்களின்  கைகளிலா உள்ளது? வந்தவர்களை வாழவைத்துதானே நமக்கு பழக்கம்? எப்படி நம்மால் நம்மை நம்பி வந்தவர்களை இப்படி நடத்த முடித்து...?

ஏன் MGR இறந்த போது நமக்குள்ளே நாம் அடித்துகொள்ளவில்லையா..? இந்திரா அம்மையார் கொல்லப்பட போது பஞ்சாபிகள் மீது தாக்குதல் நடத்தபடவில்லையா? இன்று நாம் ஒற்றுமையாக இல்லையா?

இலங்கை தமிழருக்காக போராடும் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்துக்காக பல அணிகளாக பிரிந்து நின்றுகொண்டு இருக்கும் நிலையில் நாம் இன்னொரு இனத்தை முற்றிலும் குற்றவாளிகளாக பார்ப்பது சரியான பார்வை இல்லை...!

*****


சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...