தொடரும் நண்பர்கள்

செவ்வாய், 23 மே, 2017

அழியும் ஒரு சிறுபான்மை இனம்

தோழமைகளே நான் 1998 ஆம் வருடத்தில் இருந்து 2005 வரை இலங்கையில் பணிபுரிந்தேன். இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட வெள்ளை காரர்களை போன்ற தோற்றம் உடைய ஆண்களையும், பெண்களையும் பார்த்து இருக்கிறேன். 

அவர்கள்   சிங்களம் மற்றும் தமிழ்  மொழியில் சர்வ சாதாரணமாக பேசுவதை பார்த்து வியந்து, பார்ப்பதற்கு வெளிநாட்டினர் தோற்றத்தோடு இருக்கும் இவர்கள் எப்படி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பேசுகிறார்கள் என்ற ஐயத்தை எனது நண்பரும் இலங்கை பண்பலையின் மூத்த தொகுப்பாளரும் ஆன    கேப்டன். ஸ்ரீ கந்தகுமார் அவர்களிடம் எழுப்பினேன்.  (கேப்டன். ஸ்ரீ கந்தகுமார்  அவர்களுடன் ஆன எனது அனுபவத்தை வேறு ஒருநாள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்)

கேப்டன் ஸ்ரீ.கந்தகுமார் - கண்ணாடி அணிந்து இருப்பவர்,
அருகில் நான் - சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்

இவர்களை  'பர்கர்' என்று இலங்கையில் அழைக்கிறார்கள். அவர்களது வரலாறு மிகவும் ரசிக்கத்தகுந்ததாக இருந்தது...உங்களோடு அந்த இனத்தை பற்றி பார்ப்பதற்கு நானும் தயாராகிவிட்டேன்...

16-ஆம் நூற்றாண்டில் இந்த வார்த்தை ஐரோப்பாவில் பயன்படுத்தப் பட்டுள்ளது. டச்சு மொழியில் பர்க் என்றால் நகரம் என்று பொருள், இதில் இருந்து மருவி வந்த பெயர்தான்  'பர்கர்', அதாவது நகரத்தார் என்று நமது புரிதலுக்கு வைத்துக்கொள்வோம்

(பர்கர் இன பெண்கள்)

1508 இல் இருந்து 1635 ஆம் ஆண்டுவரை இலங்கையின் பெரும்பாலான நகரங்களை போர்ச்சுக்கீசியர்கள் ஆண்டு வந்துள்ளனர்.  இந்த போர்ச்சுக்கீசியர்கள் பெரும்பாலும் வியாபாரிகளாகவும், ராணுவ அதிகாரிகளாகவும், கப்பல் ஊழியர்களாகவும் இருந்தனர்.  அவர்களது இனத்தை சேர்ந்த பெண்கள் பயணத்தில் இடம்பெறவில்லை, எனவே  இலங்கையின் பூர்வ குடிகளான சிங்கள மற்றும் தமிழ் இனத்தவரை திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த காலகட்டங்களில் ஏற்பட்ட பெயர்கள்தான் டி சில்வா, பெர்னாண்டோ போன்றவை. இந்த போர்ச்சுகீசிய இனத்தில் வந்த பர்கர்கள் நிறத்தில் கருமை அதிகம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதற்கு காரணம் போர்த்துகீசியர்கள் தென் இந்தியர்களை போன்று மாநிறம் கொண்டவர்களாக இருப்பதுதான். இப்படிதான் போர்ச்சுகீசிய பர்கர் இனம் இலங்கையில் உருவானது.


1635 - க்கு பிறகு டச்சுகாரர்களின் ஆதிக்கத்துக்கு இலங்கை மாறியது. - டச்சுக்காரர்கள் நிறத்தில் வெண்மையாக பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு இணையாக இருப்பார்கள். இவர்களது சட்டப்படி டச்சுக்காரர்கள் இலங்கை பெண்களை திருமணம் செய்யலாம் ஆனால் அவர்கள் கிறிஸ்தவர்களாக தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு பிறக்கும் பெண்கள் ஒரு டச்சுக்காரரை தான் திருமணம் செய்ய வேண்டும். இப்படி டச்சு பர்கர்கள் என்ற இனமும் தோன்றியது.
திருமணங்கள்


1795 க்கு பிறகு பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இலங்கை வந்தவுடன், பிரிட்டிஷ் ராணுவ வீரார்களும், அரசு அலுவலர்களும், தனிப்பட்ட வியாபாரிகளும் இலங்கை நாட்டிற்கு வருகை புரிந்தார்கள்.. இந்த இனமும் பூர்வகுடிகளை  திருமணம் செய்துகொண்டு பர்கர் இனத்துக்கு வலுவூட்டியது. நமது நாட்டில் வெள்ளையர்களை பறங்கியர் என்று அழைப்பதைப்போல் பர்கர்களை அந்தகாலகட்டங்களில் பறங்கியர் என்றுதான் இலங்கையில் அழைத்துள்ளார்கள்.
இவர்களில்  போர்ச்சுகீசிய , டச்சு இனத்தவர்கள் மட்டும் இல்லை, ஏனைய ஐரோப்பிய நாடுகளான  ஐரிஷ் , ஸ்காட்லாந்து மற்றும்  பிரிட்டிஷ் போன்ற நாடுகளை சேர்ந்தவர்களும் இருந்தார்கள்.  பெரும்பாலான பர்கர்கள் தங்கள் மரபு, மொழி மற்றும் மதங்களை கடைபிடிப்பவர்களாக இருக்கின்றனர்.

ஈஸ்ட் இந்தியன் கம்பனியின் பிடியில் இலங்கை போகும் வரை அவர்கள் தங்கள் மொழிகளை தடையின்றி பேசிவந்தனர், பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை வந்தபிறகு இந்த இனத்தை சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தை  தங்கள் மொழியாக மாற்றிக்கொண்டு பிரிட்டிஷ் அரசாங்க பணிகளில் சேர்ந்தார்கள். அவர்களது உடல் அமைப்பும், மொழியும்வழக்கங்களும் பிரிட்டிஷ்காரர்களுக்கு பிடித்துப்போக, பிரிட்டிஷ்காரர்கள் இவர்களை திருமணம் முடித்தார்கள். 


பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இலங்கையை தன்  வசம் கொண்டுவந்த போது, நாடு திரும்பாத மற்ற ஐரோப்பிய இனத்தவர், பிரிட்டிஷ் பிரஜைகளை திருமணம் செய்துகொண்டார்கள்.

இந்த கால கட்டத்தில் பிரிட்டிஷ்காரர்கள் தேயிலை பயிரிட இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை இலங்கைக்கு கொண்டு சென்று குடியமர்த்தினார்கள்.  இவர்கள் இன்றுவரை இந்திய வம்சாவளியினர் என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். (இவர்களை பற்றியும் மற்றொரு நாள் பார்ப்போம்)

பர்கர் இனத்தவர்கள் பிரிட்டிஷ்காரர்களால் தேயிலை தோட்ட மேற்பார்வையாளராக பணியமர்த்தப்பட்டார்கள். இவர்கள் தங்களை உற்பத்தி, தொழிலாளர் மேலாண்மை மற்றும் நிர்வாகம் ஆகியவற்றின் தலைமை அதிகாரிகளாக தங்களை நிலைநிறுத்தி கொண்டார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது மொழி மற்றும் இவர்களது கலாச்சாரம்.
காலப்போக்கில் இவர்கள் சிங்களவர்களையும், தமிழர்களையும் திருமணம் செய்துகொண்டார்கள். இன்றைய இலங்கையில் இவர்கள் 2011ஆம் வருட கணக்கெடுப்பின் படி சுமாராக 37000 பேர் உள்ளார்கள்.

இன்று வரை பார்ப்பதற்கு ஐரோப்பிய நாட்டவர்களை போன்ற தோன்றம்  கொண்டவர்கள் கூட இருக்கிறார்கள். பெரும்பாலான பர்கர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின் பற்றுபவர்களாக தான் இருக்கிரார்கள்.

பர்கர் யூனியன் பில்டிங் – கொழும்பு

இவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் செய்த தொழில்கள் எல்லாவற்றிக்கும் துணை நின்றார்கள், அரசு அதிகாரிகளாகவும், தேயிலை தோட்ட தலைமை அதிகாரிகளாகவும், ரயில் சேவையில் பலதரப்பட்ட வேலைகளிலும், தபால், தந்தி சேவைகளிலும், அரசு நிர்வாகத்திலும் பணிபுரிந்தார்கள்.

கால்பந்தாட்ட அணிகள் உருவாவதற்கு இவர்கள் தூண்டுகோலாக இருந்துள்ளார்கள். 1860ல் புகழ் பெற்ற சட்ட நிபுணராகவும், மருத்துவர்களாகவும், கொழும்பு மாநகர சபையின் கவுன்சிலராகவும், மேயராகவும் பணியாற்றியுள்ளனர்.  மேலும் இலங்கை விமான சேவையில் இந்த பிரிவை சேர்த்த பெண்கள் பலர் வேலைபார்த்து வருவது குறிப்பிட தக்கதாகும்.

இந்த இனத்தில் இருந்து வந்தவர்களில் நாம் அறிந்த சில பெயர்கள்

1. இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் – அஞ்செலோ மத்தியூஸ்
2. மைக்கல் வென்டாட்
3. முன்னாள் வீரர் லபோராய்

போன்றவர்கள் எல்லாம் இந்த இனத்துக்கு பெருமை சேர்ந்தவர்கள்தான்..


சில சகாப்தங்களுக்கு முன்பு இலங்கையில் தலைமை பதவிகளை அலங்கரித்த இந்த ஐரோப்பிய ஆசிய இனம் இன்று சிங்களமயமாக்கல் என்னும் கொள்கையால், நம் தமிழினம் போன்று பாதிப்பை சந்தித்து வெகுவாக எண்ணிக்கையில் குறைந்துவருகிறார்கள். ( ஆஸ்திரேலியா மற்றும் கனடா, பிரிட்டிஷ் போன்ற தேசங்களுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்) இலங்கையில் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட , இந்த சிறுபான்மை இனம் விரைவில் இலங்கை நாட்டில் இருந்தும் அந்நாட்டின் அங்கிகரிக்கப்பட்ட இனங்களில் இருந்தும் மறைந்துவிடும் என்பது நமக்கு மிகவும் கவலையளிக்க கூடிய ஒரு விஷயம் தான்..

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...